எம்.எல்.ஏ.,வுக்கு வரவேற்பால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் கடை திறப்புவிழாவிற்கு வந்த எம்.எல்.ஏ., காதர்பாட்ஷாவை பட்டாசு வெடித்து வரவேற்றதாலும், ரோட்டை ஆக்கிரமித்த வாகனங்களால் அப்பகுதியல் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரேயுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் தி.மு.க., நிர்வாகியின் கடை திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா வந்தார். அவருடன் ஏராளமான தி.மு.க.,வினர் கார்களில் வந்தனர். இவர்கள் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள்,கார்களை அதிகளவில் நிறுத்தினர். மருத்துவமனை உள்ளதைக் கூட கண்டுகொள்ளாமல்பட்டாசு வெடித்து எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். தி.மு.க.,வினரின் அலப்பறையால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் புது பஸ்ஸ்டாண்ட் ரவுண்டானா துவங்கி கலெக்டர் பங்களா வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தனர். அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தி.மு.க.,வினர் நிகழ்ச்சிகளில் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஆனால் எம்.எல்.ஏ., தரப்பினர் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவது, பேனர் வைப்பது போன்ற செயல்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.