நத்தம் -பழஞ்சிறை பாலம் தடுப்பணை சீரமையுங்க
கீழக்கரை,: கீழக்கரை அருகே பழஞ்சிறை கிராமத்தில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 100 மீ., நீளத்திற்கு மேம்பாலம் உள்ளது. நத்தம்-பழஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய சிற்றோடை பி.மோர்க்குளம் வழியாக சென்று சேதுக்கரை கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது. இப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட தடுப்பணைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 முதல் 2022 வரை அமைக்கப்பட்ட தடுப்பணைகள் அதிகளவில் இப்பகுதியில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தரமற்ற தடுப்பணைகளால் உரிய முறையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: சிற்றோடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் பெருமளவில் சேதமடைந்தும் விரிசலுடன் உள்ளது. அப்பகுதியில் உள்ள மண்ணைக் கொண்டே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை உரிய முறையில் ஆய்வு செய்து மராமத்து பணிகளை செய்ய வேண்டும். இதனால் சேதமடைந்த தடுப்பணைகளில் இருந்து வெளியேறும் நீரால் பயன் இருக்காது என்றனர்.