நீலகண்டி ஊருணி நிரம்பியும் பயன் இல்லைமுட்செடி, குப்பை, கழிவுநீரால் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் நீலகண்டி ஊருணி பல ஆண்டாக பராமரிக்கப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்தும், குப்பை தொட்டியாகி மாறியதால்ஊருணி நிரம்பினாலும் சுகாதாரக்கேடு, படித்துறை வசதியின்றி குளிக்க, துவைக்க பயன்படுத்த முடியாமல்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் நகர் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இவை நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன. நிலத்தடி நீர் 30 முதல் 60 அடியில் கிடைத்தாலும் உப்பு நீராகவே உள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் குடிநீருக்கும், சமையல் செய்வதற்கும் காவிரி குடிநீர், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இவற்றில் சிலவற்றை தவிர்த்து பெரும்பாலான ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட முதுனாள், சூரன்கோட்டை வழியில் உள்ள நீலகண்டி ஊருணி குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த ஊருணி தண்ணீரில் கால்நடைகளை குளிப்பாட்டியும், துணி துவைக்க, குளிக்க மக்கள் பயன்படுத்தினர்.இந்நிலையில் ஊருணி பராமரிப்பின்றி படித்துறை சேதமடைந்துள்ளது. தற்போது ஊருணி குப்பை, சாக்கடை நீர் கலந்து மாசடைந்துள்ளது. கரைப்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன.குப்பையை கொட்டுவதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி மையமாகி உள்ளது.தொடர் மழையால் ஊருணி நிரம்பிய போதும் படித்துறை வசதி, சுகாதாரக்கேட்டால் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே நீலகண்டி ஊருணியில் படித்துறை கட்டித்தர வேண்டும். முட்செடிகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.