திருவாடானையில் பூட்டிகிடக்கும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம்
திருவாடானை: திருவாடானையில் மூடப்பட்டியிருக்கும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் குடிநீர் சம்பந்தமான குறைகளை கூற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். சின்னக்கீரமங்கலம் ரத்தினமூர்த்தி: கோடை காலம் துவங்க இருப்பதால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கிராம மக்கள் தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு குறித்து மனு அளிக்கின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் இருந்தால் அங்கு பிரச்னைகளை கூறலாம்.அந்த அலுவலகம் மூடப்பட்டு ராமநாதபுரத்தில் இயங்குவதால் பொதுமக்கள் குறைகளை கூற வாய்ப்பில்லாமல் உள்ளது. ஆகவே சின்னக்கீரமங்கலத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மீண்டும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.