சாலையோரங்களில் நடப்படும் கடைகளின் விளம்பர போர்டால் தொடர் விபத்து அபாயம்: ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ஏர்வாடி செல்லும் பிரதான பகுதியில் முள்ளுவாடி வரை சாலையோர விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. 2020க்கு பிறகு கீழக்கரை நகரின் புறநகர் பகுதியாக உள்ள இடங்களில் ஏராளமான வணிக வளாகங்கள் கடைகள் வந்துள்ளன. கீழக்கரை நுழைவு வாயில் முதல் முள்ளுவாடி வரை உள்ள 2 கி.மீ.,க்கு பிரியாணி கடைகள், இரும்பு கடை மற்றும் வணிக வளாகங்களில் விளம்பர போர்டுகள் கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான பகுதிகளில் கான்கிரீட் கலவையுடன் நட்டு வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் கூறியதாவது: ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தங்களது இடத்தில் இருந்து 5 முதல் முதல் 10 அடி துாரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பதாகைகள் மற்றும் போர்டுகளை தற்காலிகமாக அதிக அளவு அமைத்துள்ளனர். இதனால் ஒரே சமயத்தில் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமின்றி அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அரசு பாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் வரையறுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கீழக்கரை வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் போலீசார் அடங்கிய குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதிகாரிகளின் மெத்தன போக்கால் இதே நிலை தொடர்ந்தால் விபத்திற்கு வழி ஏற்படும் என்றனர்.