உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டட பணி தரமற்றிருப்பதாக புகார்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டட பணி தரமற்றிருப்பதாக புகார்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சிக்கல்: சிக்கல் அரசு மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் தரமற்றதாக நடக்கும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.சிக்கல் அரசு மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை உள்ளது. இங்கு சிக்கல் மற்றும் சுற்று வட்டாரத்தில் 18க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து மாணவர்கள் கல்வி பயில்வதற்காக வருகின்றனர்.தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக் கட்டடம் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடக்கிறது.தற்போது அஸ்திவாரம் தோண்டப்பட்டு கட்டட கட்டுமானப் பணிகளில் மண் போட்டு அவற்றின் மீது தரைத்தளம் அமைக்கும் பணியில் தரமற்ற மண் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தாலுகா குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் லோடுமேன் சங்க மாவட்ட துணைச் செயலாளர் போஸ் ஆகியோர் கூறியதாவது:சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. அதன் அடித்தளம் அமைக்க கிராவல் மண் போட வேண்டும்.அதற்கு பதில் அருகில் உள்ள நிலங்களில் இருந்து களிமண் போட்டு அதன் அடித்தளத்தை நிரப்பி வருகின்றனர்.இதனால் குறிப்பிட்ட காலத்தில் தரைத்தளங்களில் பெருவாரியான விரிசல் ஏற்பட்டு கட்டடத்தின் தாங்கும் உறுதித் தன்மை விரைவாக பாதிப்பு ஏற்படும்.சுவர்களில் விரிசல் ஏற்படும். ஆகவே பொதுப்பணி துறையின் மூலமாக கட்டப்படும் இக்கட்டடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நிதி வீணடிப்பதை தவிர்க்க உரிய முறையில் தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.மாணவர்களின் எதிர்காலம் கருதி ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சிகுளம், பனையடியேந்தல் ஆகிய அரசு பள்ளிகளில் கட்டுமானங்கள் அதிகளவு விரிசல் ஏற்பட்டுள்ளதால் தற்போது மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.எனவே மாவட்ட கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !