அங்கன்வாடி கட்டடத்தில் தொடக்கப்பள்ளி கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி தொத்தமகன்வாடியில் 2001ல் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேதமடைந்த நிலையில் 2023ம் ஆண்டு ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்தது. பள்ளியில் 20 மாணவர்களும், தலைமையாசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் உள்ளனர். 1 முதல் 5 வகுப்புகள் உள்ளன. இந்நிலையில் அக்., 22 முதல் பள்ளியின் மேல் தளத்தில் மழைநீர் புகுந்து ஒழுக ஆரம்பித்தது. கட்டடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மழை நீர் மேல் தளத்தில் தேங்கிய நிலையில் இருந்தது. ஈரப்பதத்தின் தாக்கத்தால் சிமென்ட் கான்கிரீட் பூச்சுக்கள் உடைந்து விழுந்தன. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சற்று தொலைவில் உள்ள தொத்தமகன்வாடி அங்கன்வாடி மைய கட்டடத்தில் பள்ளி இட நெருக்கடியில் இயங்கி வருகிறது. கடலாடி பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதியதாக தரமான முறையில் பள்ளி கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே கட்டடத்தை கடலாடி யூனியன் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடி மையத்தில் சிறு குழந்தைகளுடன் உள்ள நிலையில் அதே கட்டடத்தில் பள்ளி இயங்குவது சிரமமான காரியம். மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் மெத்தனப் போக்கை கையாண்டால் பா.ஜ., சார்பில் கண்டன போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.