அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி 19வது வார்டில் உள்ள பெத்தெரி தெருவில் தனியார் அலைபேசி டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார் அலைபேசி டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி தலைவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கையொப்பமிட்ட மனுவை அளித்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு வந்த ஆண்களும், பெண்களும் எங்கள் பகுதியில் டவர் அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தினர். இப்பகுதியை சுற்றிலும் இரண்டு அங்கன்வாடி மையம், கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளது என்றும், அதிகமானோர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ள இடத்தில் அலைபேசி டவர் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.