ஊராட்சி அலுவலகம் கட்ட கன்னிராஜபுரத்தில் எதிர்ப்பு
சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சியில் தற்போது புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுமானப்பணி ஆரம்ப நிலையில் நடந்து வருகிறது.ஏற்கனவே செயல்பட்டு வந்த ஊராட்சி அலுவலக கட்டடம் நல்ல நிலையில் இருந்த போதும் அங்கிருந்து 2 கி.மீ.,ல் இந்திரா நகர் பகுதியில் கட்டப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திப்பதால் புதிய ஊராட்சி அலுவலகத்தை தற்போதுள்ள இடத்தில் அமைக்கலாம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஆத்தி, அந்தோணி பீட்டர், பிரைட்டன் ஆகியோர் கூறியதாவது: கன்னிராஜபுரம் ஊராட்சியில் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஊராட்சி அலுவலகத்தால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் 2 கி.மீ., ல் வடக்கு இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி அலுவலகம் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வருகிறது.இதனால் ஆட்டோவில் சென்றால் கூடுதல் கட்டணம் செலவழித்து செல்ல நேரிடும். பஸ் போக்குவரத்தும் கிடையாது. எனவே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. இவ்விஷயத்தில் கடலாடி யூனியன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.