நெற்பயிர் காப்பீடு: நவ.15 கடைசி
ஏக்கருக்கு ரூ. 387.39 பிரீமியம்பரமக்குடி: பரமக்குடி வட்டாரத்தில் உள்ள நயினார்கோவில், போகலுார், பரமக்குடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாகும். நயினார்கோவிலில் 10,500 ஹெக்டேர், போகலுாரில் 4900 ஹெக்டேர் மற்றும் பரமக்குடியில் 10,000 ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் சூழலில் நெற்பயிர் மழை வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல், வறட்சி யால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படலாம். நஷ்டத்தை தவிர்க்க பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகை விவசாயிகள் பெற முடியும். நடப்பு ஆண்டில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 387.39 ரூபாய் பிரீமியம் தொகையை அந்தந்த பகுதி கூட்டுறவு சங்கங்கள், இ--சேவை மையங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கு உள்ள வங்கிகளில் செலுத்த வேண்டும். மகசூல் இழப்பு ஏற்படும் போது ஏக்கர் ஒன்றுக்கு 25,825.91 ரூபாய் காப்பீடு வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்ய ஆதார் அட்டை நகல், வி.ஏ.ஓ., அலுவலரின் அடங்கல், பேங்க் பாஸ்புக் நகல், முன்மொழிவு படிவம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாக உள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் நெற்பயிருக்கு உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.