பாம்பன் பாலம் திறப்பு விழா விரைவில் அறிவிக்கப்படும் கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்சவா தகவல்
மானாமதுரை:மானாமதுரையில் நடந்த ரயில்வே பாதுகாப்பு உரையாடல் கூட்டத்தில் பாம்பன் ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்சவா தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே துறையைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு உரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்சவா, பாதுகாப்பு அலுவலர் முகைதீன் பிச்சை, முதன்மை கோட்ட போக்குவரத்து மேலாளர் பிரசன்னா, மின்சார பிரிவு மேலாளர் மஞ்சுநாத், தகவல் தொழில் நுட்ப மேலாளர் ராம் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு சம்பந்தமான அறிவுரைகளை வழங்கினர்.கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்சவா கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் ரயில்வே மேம்பாலத்தில் பாதுகாப்பு ஆணையரின் இறுதி கட்ட ஆய்வு முடிவடைந்துள்ள நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழா தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. செங்கோட்டையிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் இரு மார்க்கங்களிலும் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.