பாம்பன் துாக்கு பாலம் 53 நாட்களுக்கு பின் திறப்பு : படகுகள் கடந்து சென்றன
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் 53 நாட்களுக்கு பின் திறந்து மூடப்பட்டது. இப்பாலம் வழியாக பாய்மர படகுகள், மீன்பிடி படகுகள் கடந்து சென்றன. பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை திறந்து மூடுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டது. கடைசியாக ஆக.,12ல் திறந்தனர். ஆனால் 6:00 மணி நேரத்திற்கு பின்பே மூடினர். இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. துாக்கு பாலத்தில் உள்ள தொழில்நுட்ப பிரச்னையை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்து, சரி செய்தனர். நேற்று மதியம் 12:10 மணிக்கு பழைய ரயில் துாக்கு பாலத்தை திறந்ததும், புதிய துாக்கு பாலமும் திறக்கப்பட்டது.இதன்பின் கடலுாரில் இருந்து கொச்சின் வழியாக மாலத்தீவு செல்லும் இருபாய்மர படகுகள், நாகையில் இருந்து துாத்துக்குடி செல்லும் ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகு, உள்ளூர் மீன்பிடி படகுகள் பாலத்தை கடந்து சென்றன. பாலத்தை படகுகள் கடந்து சென்றதும் புதிய துாக்கு பாலம் சிக்கல் இன்றி மூடப்பட்டது. ரயில்கள் வழக்கம்போல் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.