குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு; தாசில்தார் சமரசம்
திருவாடானை : குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் பூட்டினர். தாசில்தார் சமரசத்திற்கு பின் அலுவலகம் திறக்கப்பட்டது. திருவாடானை அருகே அரசத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பல மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தினர். தாசில்தார் அமர்நாத் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிநீர் சப்ளை செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். அதன் பின் ஊராட்சி அலுவலகம் திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடந்தன. அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக குடிநீருக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை என்றனர்.