உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துரோகி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.,வை மீட்போம் பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் சபதம்

துரோகி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.,வை மீட்போம் பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் சபதம்

கமுதி: துரோகி பழனிசாமியை வீழ்த்தி அ.தி.மு.க.,வை மீட்போம் என்று தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இணைந்து தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தினகரன் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது பன்னீர்செல்வம் கூறியதாவது: தேவர் நினைவிடத்தில் எம்.ஜி.ஆர்., ஜெ., ஆட்சி மீண்டும் உருவாக நாங்கள் சபதம் எடுத்துள்ளோம். எங்களோடு அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் வந்துள்ளனர். தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை நாங்கள் இணைந்து செயல்படுவோம். பசும்பொன்னில் உருவான இந்த கூட்டணி தொடரும் என்றார். தினகரன் கூறியதாவது : எம்.ஜி.ஆர்., காலத்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் இப்போது வந்திருக்கிறார். ஜெ., பசும்பொன்னுக்கு வருவதற்கு முன்பு பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் முன்னதாக வந்திருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். தற்போது தொண்டர்களை காப்பதற்காக எங்களோடு அவரும் வந்திருக்கிறார். மீண்டும் நல்லாட்சி வருவதற்கு செங்கோட்டையன், பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம். பழனிசாமி என்ற துரோகியை வீழ்த்தும் வரை நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க.,வை மீட்போம். சசிகலா எங்களோடு வந்திருப்பார். கொஞ்சம் தாமதமாக புறப்பட்டதால் எங்களோடு சேர்ந்து கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் சசிகலா எங்களுடன் தான் உள்ளார். அ.தி.மு.க., எங்களுக்கு எதிரி கிடையாது. பழனிசாமி மட்டும் தான் எங்களுக்கு எதிரானவர். ஜெ.,வின் தொண்டர்களாக நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். செங்கோட்டையன் இன்னும் அ.தி.மு.க.வில் தானே இருக்கிறார் என்ற கேள்விக்கு, பதில் எதுவும் சொல்லவில்லை. இணைந்து செயல்படுவீர்களா என கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ