பரமக்குடி - எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பால ஓரங்களில் குப்பைமேடு
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் செல்லும் வைகை ஆறு தரைப்பால ஓரங்களில் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் வீசிச்செல்லும் குப்பையால் சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது. பரமக்குடி நகராட்சி மூலம் மக்கும், மக்காத குப்பை மக்களிடமிருந்து பெற்று துாய்மைப் பணியாளர்கள் கொண்டு செல்கிறனர். இவ்வாறு பெற்றுச் செல்லப்படும் குப்பை, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் ரோட்டோரம் குப்பையை குவித்து வைப்பது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் வைகை ஆறு தரைப்பாலம் மற்றும் சர்வீஸ் ரோட்டோரங்களில் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் குப்பையை மூட்டையாக கட்டி அதிகளவில் வீசி செல்கின்றனர். வசிக்கும் இடம் மற்றும் நகரை துாய்மையாக வைத்துக் கொள்ள துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மக்களும் பொறுப்பின்றி செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையை முறையாக நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க உறுதி ஏற்க வேண்டும்.