அரசு சட்டக் கல்லுாரி விடுதியில் தொடரும் தண்ணீர் பிரச்னை தீர்வு காண பெற்றோர் கோரிக்கை
திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சி பகுதியில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு 700க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில் பெண்களுக்கான மகளிர் விடுதி தனியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுவதும் உவர் நீராக இருப்பதால் அவற்றை பயன்படுத்துவதற்கு எவ்வித வழியும் இன்றி உள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. குதக்கோட்டை ஊராட்சியில் இருந்து அரசு சட்டக்கல்லுாரிக்கு காவிரி குடிநீர் பைப் லைன் வழங்கி உள்ளனர். அவற்றில் முறையாக தண்ணீர் வராததால் தண்ணீர் பிரச்னையால் கல்லுாரியில் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மாணவிகளின் பெற்றோர் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டில் மகளிர் விடுதி இயங்கி வரும் நிலையில் குடிநீர் மற்றும் புழக்கத்திற்கான தண்ணீர் பிரச்னை அதிகளவு உள்ளது. 40 பேர் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி கல்லுாரி மகளிர் விடுதியில் சேர்வதற்கு தயக்கம் காட்டு கின்றனர். எனவே ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கல்லுாரி வளாகத்தில் புதிதாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து அவற்றில் முறையாக காவிரி நீர் வழங்கினால் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றனர்.