கடலாடி அரசு கலைக் கல்லுாரியில் முதல்வர் பேராசிரியர், அலுவலர்கள் நியமிக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை
கடலாடி : கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நிரந்தர முதல்வர் மற்றும் போதுமான பேராசிரியர்கள், அலுவலர்கள் இல்லாத நிலை தொடர்வதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர். கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.பி.ஏ., பி.காம்., என ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு கணிதப் பாடப்பிரிவு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பி.பி.ஏ., கொண்டுவரப்பட்டது. இங்கு அதிக எண்ணிக்கையில் படிக்கும் தமிழ் துறையில் ஏழு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு கவுரவ விரிவுரையாளர்களும், புதிதாக கொண்டுவரப்பட்ட பி.பி.ஏ., பாடப்பிரிவுக்கு ஒரு பேராசிரியர் கூட இல்லை. கவுரவ விரிவுரை யாளர்கள் நியமிக்கப் படுவதாக உயர் கல்வித் துறையில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது வரை பணி அமர்த்தப் படாத நிலை தொடர்கிறது. முதல்வர், நிதியாளர், கண்காணிப்பாளர் ஆகியோரும் நியமிக்கப்படவில்லை. கடலாடி வர்த்தக சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மாணவர்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே உயர் கல்வித்துறை அதிகாரிகள் கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியை புறக்கணிக்காமல் போதுமான பேராசிரியர்கள் மற்றும் நிரந்தர முதல்வர், நிதியாளர், கண்காணிப்பாளர் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்ற னர்.