தொண்டி பஸ் ஸ்டாண்டில் வெயிலில் தவிக்கும் பயணிகள்
தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்டில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருந்து தவிக்கின்றனர்.தொண்டி பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ்ஸ்டாண்டில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பயணிகள் அமர சிறிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் வெயில், மழைக்கு ஒதுங்க போதுமான வசதிகள் இல்லை.தற்போது வெயில் வாட்டும் நிலையில் நிழலுக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து தொண்டி மாலிக் கூறியதாவது:பஸ் ஸ்டாண்டில் வெயிலில் காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூரை வசதி இல்லை. அதிக வெயிலால் பயணிகள் வெயிலில் காத்திருப்பது உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருப்பதால் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் உடல் சோர்வு, வெப்பம் தாங்க முடியாமல் மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கபடுகின்றனர்.எனவே பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழலில் காத்திருக்கும் வகையில் நிழற்கூரை வசதிகளை ஏற்படுத்தி பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்றார்.