உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாயில் உடைப்பால் ராமநாதபுரத்தில் மக்கள் பரிதவிப்பு! நகர், புறநகரில் 6 நாட்களாக குடிநீர் வரவில்லை

காவிரி குழாயில் உடைப்பால் ராமநாதபுரத்தில் மக்கள் பரிதவிப்பு! நகர், புறநகரில் 6 நாட்களாக குடிநீர் வரவில்லை

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2011ல் திருச்சி அருகே நங்கநல்லுார் பகுதி காவிரி ஆற்றிலிருந்து 200 கி.மீ.,க்கு குழாய் மூலம் ராமநாதபுரத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல் நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகராட்சி பகுதிகளில் தினமும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி அருகே குழாய் சேதம் காரணமாக கடந்த 6 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பில் உள்ள குடிநீரை சில பகுதிகளுக்கு லாரியில் பெயரளவில் விநியோகம் செய்கின்றனர். இதனால் மக்கள் குடிநீரை குடம் ரூ.12 வரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். பேராவூர் ஏ. முருகேசன் கூறுகையில், 6 நாட்களாக குடிநீர் வராமல் சிரமப்படுகிறோம். ஊரில் புதிதாக கட்டியுள்ள மேல்நிலைத்தொட்டி பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. அதில் நீர் ஏற்றி தினசரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் திருச்சியில் இருந்து வரும் பிரதான குழாயில் செவ்வூர் பகுதியில் சேதமடைந்துள்ளதை சீரமைக்கும் பணி நடக்கிறது. இன்று அல்லது நாளை குடிநீர் வந்துவிடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை