திருவாடானையில் குடியிருப்பு வசதியில்லை வாடகை வீடு தேடி அலையும் போலீசார்
திருவாடானை : திருவாடானையில் போலீஸ் குடியிருப்பு அமைக்கப்படாததால் போலீசார் வாடகை வீடுகளை தேடி அலைகின்றனர். குடியிருப்பு அமைக்க ஏற்ற இடம் இருந்தும் அமைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தாலுகா தலைமையிடமான திருவாடானையில் போலீஸ்ஸ்டேஷன் உள்ளது. திருவாடானை சப்-டிவிசனுக்கு உட்பட்ட தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு குடியிருப்புகள் உள்ளன. ஆனால் திருவாடானையில் மட்டும் போலீஸ் குடியிருப்பு இல்லாமல் இருப்பதால் போலீசார் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்த போலீஸ்ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 37 போலீசார் பணியாற்றி வருகின்றனர். குடியிருப்பு இல்லாததால் வீடு கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலை தொடர்கிறது. குடியிருப்பில் அனைத்து வசதிகளும் இருக்கும். ஆதலால் போலீசார் உடனடியாக சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு பணிக்கு திரும்பும் நிலை இருக்கும். போலீஸ்டேஷனில் ஓய்வு எடுக்கும் அறை இருந்தாலும் போதிய வசதிகள் இல்லை. தாலுகா அலுவலகம் அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு பாழடைந்ததால் பல ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.,க்கு மட்டும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. போதிய இடம் இருந்தும் குடியிருப்பு வசதியில்லை. எனவே போலீசாருக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.