உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பல கோடி ரூபாய் வாடகை கொடுக்கும் தபால் துறை

பரமக்குடியில் பல கோடி ரூபாய் வாடகை கொடுக்கும் தபால் துறை

பரமக்குடி: பரமக்குடி தலைமை தபால் அலுவலகத்திற்கு சொந்த இடம் இருந்தும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி ரூபாய் வாடகை என்ற பெயரில் வீணடிக்கப்படுகிறது. மேலும் வசதிகளும் மேம்படுத்தப்படாமல் மக்களுக்கு சேவை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பரமக்குடி நகராட்சியில் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு தலைமை தபால் அலுவலகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சொந்த இடத்தில் இயங்கியது. கட்டடம் சேதமடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கிய தபால் அலுவலகம் தற்போது ஆற்றுப்பாலம் அருகில் உள்ளது. இதற்காக ஆரம்ப காலத்தில் ரூ.20 ஆயிரம் வாடகை கொடுத்த நிலையில் தற்போது ரூ.70 ஆயிரத்திற்கு மேல் மாதம் வாடகை செலுத்தும் சூழல் உள்ளது. இதனால் 35 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் வாடகை என்ற பெயரில் அரசு பணம் கொடுக்கப்பட்டுஉள்ளது. தொடர்ந்து தபால் துறையில் சாதா மற்றும் ஸ்பீடு போஸ்ட், வங்கி சேவைகள், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக உள்ளது. மேலும் ரயில், பஸ், விமான டிக்கெட் சேவைகள் என மேம்படுத்தப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நெரிசலில் மக்கள் தவிக்கும் நிலையில், தபால் துறையின் முழுமையான சேவையை பெற முடியாமல் உள்ளனர். ஆகவே மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசின் அலுவலர்கள் உடனடியாக புதிய தபால் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பரமக்குடி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை