கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம், : கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் வெளி மாநில சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, உப்பூர், ஏ.மணக்குடி, புதுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரோட்டில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ரோட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டிருந்த மெகா பள்ளங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைப்பு செய்த நிலையிலும், சீரமைப்பு செய்த பகுதிகளில் ரோடு சீரமைப்பு பணி காரணமாக மேடாக உள்ளதால் வேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.