ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை ; வயர்மேன்கள், களஉதவியாளர் புலம்பல்
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போது பருவமழை காலமாக உள்ளதால் மின்தடையை விரைவில் சீரமைக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. கூடுதல் பணிச்சுமையால் வயர்மேன், களஉதவியாளர்கள், பொறியாளர்கள் சிரமப்படுகின்றனர்.திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் திருவாடானை, தொண்டி, நகரிகாத்தான், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார், உப்பூர் ஆகிய இடங்களில் துணை மின்நிலையங்கள் உள்ளன. இங்கு கள உதவியாளர் மற்றும் வயர்மேன்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை சரி செய்யாததால் தற்போது பணியாற்றும் வயர்மேன்கள், கள உதவியாளர்கள், கேங் மேன்கள் என மூவருக்கும் கூடுதல் பணி சுமை உள்ளது. 4க்கும் மேற்பட்ட பகுதிகளை ஒரே வயர்மேன் பார்க்கிறார். மழை நேரத்தில் மின்தடை ஏற்படும் போது மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு பகுதியில் மின்தடை சரி செய்த பின்பே அடுத்த பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மின்தடை ஏற்பட்ட பின்னும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. மரக்கிளை முறிவு ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டிருந்தால் அந்த மரத்தை மின்வாரிய ஊழியர்கள் அகற்ற நீண்ட நேரம் ஆகிறது. ஒவ்வொரு மழைக்காலம் வரும் போதும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள் புலம்பி தவிக்கின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் மன உளைச்சலோடு பணிபுரியும் மின் ஊழியர்கள் கவனக்குறைவால் மின் விபத்துக்கு ஆளாகின்றனர். பொறியாளர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதை உணர்ந்து அரசு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் கூடுதலாக மின் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.--