ராமநாதபுரத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மறியல் போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை அமல் படுத்த கூடாது. மீறி செயல்படுத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்வோம் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.சி.ஜி., என்ற நிறுவனத்திற்கு தமிழக அரசின் சுற்றுப்புற சூழல் தாக்க ஆணையம் அனுமதியளித்துள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசாணை வழங்கவில்லை என கூறியுள்ளார். ராமநாதபுரத்தை சிறப்பு வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துவோம் என்றார். பா.ஜ., பொதுச் செயலாளர் சண்முகநாதன் பேசுகையில், ராமநாதபுரம் பெரிய கண்மாயில் காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி சிறிய அணை போன்று உருவாக்கினால் மக்களின் குடிநீர் தேவைக்கு பயனளிக்கும், என்றார். கூட்டத்தில் தே.மு.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., எஸ்.டி.பி.ஐ., கட்சி, தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.