உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருநாழியில் தொடர் மின்தடை பொதுமக்கள் அவதி

பெருநாழியில் தொடர் மின்தடை பொதுமக்கள் அவதி

பெருநாழி: பெருநாழி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பால் பெருநாழி, சண்முகபுரம், பாப்பி ரெட்டிப்பட்டி, திம்மநாதபுரம், வீரமச்சான்பட்டி, பொந்தம்புளி, காடமங்கலம், டி.எம்.கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். பகலிலும் இரவிலும் கொசுத்தொல்லையால் காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் படிப்பதும் சிரமமாக உள்ளது. ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் உணவு தயார் செய்வது மற்றும் வங்கி பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெருநாழி மின்வாரிய அலுவலகத்தினர் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றியும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !