ராமநாதபுரத்தில் புத்தகத்திருவிழா நிறைவு: ரூ.1 கோடிக்கு விற்பனை
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 7 வது புத்தகத்திருவிழா நேற்று உடன் நிறைவு பெற்றது. 55ஆயிரத்து 600 மாணவர்கள், 34ஆயிரத்து 450 பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்விதுறை, பொதுநுாலக இயக்கம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மார்ச் 21 முதல் 30 வரை புத்தகத் திருவிழா நடந்தது. இதில் 86 அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. பாரம்பரிய உணவுபொருட்கள், மூலிகை மருத்துவம், ஓவிய கண்காட்சி, மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை, தினமும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடந்தது. நேற்றறைய நிறைவு விழாவிற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு, மாவட்ட நுாலக அலுவலர் (பொ) பாலசரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தவச்செல்வம், ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் தலைவர் சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி உட்பட பலர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., பாண்டி நன்றி கூறினார்.