ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடிநீரின்றி அவதி
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடிநீரின்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள புதிய கட்டடத்தில் ஐந்து தளங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து தளங்களிலும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் உதவியாளர்களும் உள்ளனர். இவர்களின் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்படாமல் உள்ளன. ஐந்து தளங்களுக்கும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு மொத்தமாக பெரிய சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு அதிலிருந்து ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் இணைப்பில் தண்ணீர் வராததால் முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் குடிநீருக்காக பாட்டில்களை வைத்துக்கொண்டு கடை, கடையாக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பல நோயாளிகள் மினரல் வாட்டர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு உரிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.