உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

ராமநாதபுரம் : தமிழகத்தில் காலிப்பணியிடம் இல்லாத நிலையில், பெயரளவில் கவுன்சிலிங் நடத்தி வருவது, ஆசிரியர் பயிற்றுனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 6,500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது ஆசிரியர் பணிமாறுதலுக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் கவுன்சிலிங் நடப்பதாக அறிவித்தனர். ஆனால் தமிழகத்தில் காலிப்பணியிடம் இல்லாத நிலையில், கவுன்சிலிங் எப்படி நடத்த முடியும், என ஆசிரியர் பயிற்றுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆண்டுதோறும் ஆசிரியர் பயிற்றுனர்கள் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இதன் மூலம் காலிப்பணியிடம் ஏற்பட்டு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை.இதுகுறித்து அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஆரோக்கிய ராஜ்குமார் கூறியதாவது: தற்போது நடந்த கவுன்சிலிங் மூலம் யாருக்கும் இடமாறுதல் கிடைக்கவில்லை. காலிப் பணியிடமே இல்லாமல் கவுன்சிலிங் நடத்துவதாக குழப்புகின்றனர். கவுன்சிலிங்கிற்கு முன்பு நிர்வாக காரணம் என்ற பெயரில், பணம் பெற்று கொண்டு ஆங்கில ஆசிரியர் பணியிடத்தில் அறிவியல் ஆசிரியர் பயிற்றுனரை நியமித்தனர். மேலும் ஓரிடத்தில் பணியில் சேர்ந்து குறைந்தது ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளில் நியமித்த பின் ஏற்படும் காலியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். மாநில திட்ட இயக்குனரை சந்தித்து இது குறித்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை