உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சந்திர கிரகணத்தன்று நிலாச்சோறு உண்ட ராமநாதபுரம் கிராம மக்கள்

சந்திர கிரகணத்தன்று நிலாச்சோறு உண்ட ராமநாதபுரம் கிராம மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்கள் சார்பில் சந்திர கிரகணத்தன்று கர்ப்பிணிகள் வெளியே வருவது, உணவு உண்ணக்கூடாது என்ற பழைய மூடநம்பிக்கையை களையும் வகையில் கிராமங்களில் இரவு நிலாச்சோறு உண்ணும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8:57 மணி முதல் சந்திர கிரகணம் ஆரம்பித்து இரவு 11:01 முதல் 12:33 வரை முழு சந்திர கிரகணம் தோன்றியது. இந்த நேரத்தில் சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் மாறியது. இதில் சந்திர கிரகணம் அன்று கர்ப்பிணிகள் வெளியே வருவது, உணவு உண்ணக்கூடாது என்ற பழைய மூடநம்பிக்கை உள்ளது. இதனை களைய அறிவியல் இயக்கத்தின் துளிர் இல்லங்கள் கிராமப்புறங்களில் அறிவியல் பிரசாரத்தின் மூலம் சந்திர கிரகணம் என்பது சாதாரண நிழல் மறைப்பு நிகழ்வாகும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால் இவ்வாறு நிகழ்கிறது என்பதை பலுான் மற்றும் பந்துகள் மூலம் எளிய பரிசோதனைகளை விளக்கி கூறி கிராமப்புற மக்களுக்கு புரிய வைத்தனர். கிராமங்களில் உள்ள பெரியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று நடைபெற்ற சந்திர கிரகணத்தன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வந்து நிலாச் சோறு உண்டு சந்திர கிரகணம் ஏற்படுவதை ரசித்துக் கொண்டே உணவருந்தினர். மாவட்டத்தில் திருவாடானை ஒன்றியம் அந்தி வயல், திணையத்துார் கிராமம், ராமநாதபுரம் ஒன்றியத்தில் நரியனேந்தல் கிராமம், பரமக்குடி ஒன்றியத்தில் பகை வென்றி கிராமம், திருப்புல்லாணி ஒன்றியத்தில் மேலமடை, கன்னியாபுரம் கிராமம், முதுகுளத்துார் ஒன்றியம் புல்வாய்குளம் கிராமம், போகலுார் ஒன்றியத்தில் கே. வலசை கிராமம் மற்றும் பல்வேறு இடங்களில் சந்திர கிரகண நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் அறிவியல் இயக்கம் நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ