அகதிகள் இலங்கை செல்ல திட்டம் ராமேஸ்வரம் மீன்துறை எச்சரிக்கை
ராமேஸ்வரம்: அகதிகள் இலங்கை செல்ல திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததால் ராமேஸ்வரம் படகில் மீன்பிடிக்க அகதிகளை ஏற்றக்கூடாது என மீன்துறையினர் தெரிவித்தனர்.இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 2022 முதல் தற்போது வரை 400 க்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதியாக தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள முகாமில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி போதுமானதாக இல்லை. இதனால் வருவாய் இன்றி அகதிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இலங்கை அதிபராக அனுரகுமார திசநாயகே பொறுப்பேற்ற சில மாதங்களுக்கு பின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவித்தார். இதனால் மண்டபத்தில் உள்ள அகதிகள் கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளதாக மத்திய, மாநில உளவுத்துறை அரசுக்கு தெரிவித்தது.இதையடுத்து ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் கூறுகையில், 'மீன்பிடிக்க செல்லும் படகில் மீனவர்கள் என்ற பெயரில் இலங்கை அகதிகள், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்றிச் செல்ல கூடாது. மீறினால் மீன்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.