அதிக மீன்கள் சிக்கியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் குஷி
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கெடுபிடி இல்லாமல், ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினார்கள்.மீன்பிடி தடை காலத்திற்கு பின் ஜூன் 15 முதல் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்வது படகுகளை சிறை பிடிப்பது அதிகரித்தது. இலங்கையின் தொடர் கெடுபிடியால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்தனர். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கி தவித்தனர். இச்சூழலில் மீனவ இளைஞர்கள் பலர் வேலை தேடி கன்னியாகுமரி, கேரளாவுக்கு தஞ்சம் புகுந்தனர்.இந்நிலையில் நவ., 2ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் இறால், பாரை, வாவல் மீன்கள் அதிகமாக சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படை தாக்குதல், சிறை பிடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இலங்கை கடற்படையின் கெடுபிடி இல்லை. இதனால் எதிர்பார்த்த மீன்கள் சிக்கியதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.