ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்; நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் தமிழக அரசு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்காததால் 50 சதவீதம் அதாவது 256 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்திய, இலங்கை எல்லையில் இவர்கள் மீன்பிடித்த போது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.கைது, தாக்குதலுக்கு பயந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்தனர். பின் ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பினார்கள். பெரிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.