உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை பறக்கும் கோலா மீன்

மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை பறக்கும் கோலா மீன்

கீழக்கரை:மன்னார் வளைகுடா கடலில், பறக்கும் தன்மை கொண்ட அரிய வகை கோலா மீன்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. கோலா மீன்கள், எதிரிகளிடமிருந்து தப்பிக்க அவ்வப்போது கடலில் நீரின் மேல் பரப்பில் பறக்கும் வித்தையை கற்றுக் கொண்டுள்ளன. கோலா மீன்களின் இருபக்க கன்ன துாவிகள் சிறகுகள் போல நீளமானவை. சில வகை கோலாக்களுக்கு, கன்ன துாவியில் போக உடலின் இருபுறமும் இன்னும் இரு துாவிகளும் இயங்கும். மீன்களின் வாலில் உள்ள இரு துாவிகளில், கீழ் துாவி, சுக்கான் துாவி. கோலா மீன் பறக்க முடிவு செய்து விட்டால், நீருக்கு அடியில் வேகமாக நீந்தி, கடலின் மேற்பரப்பை நோக்கி மணிக்கு, 37 கி.மீ., வேகத்தில் விரைந்து செல்லும். அப்போது அதன் சிறகு போன்ற துாவிகள், உடலுடன் இறுக்கமாக ஒட்டி இருக்கும். நீர்மட் டத்தை கிழித்து, கோலா மீன் மேலெழும்போது, இந்த சிறகு துாவிகள் விரிந்து அதிர துவங்கும். போதுமான வேகம் கிடைத்ததும், மீன் கடலை விட்டு வெளியேறி பறக்க தொடங்குகிறது. கடலை விட்டு வெளியே வருவது, அதன் வால் தான். க டல் நீரை விட்டு, நான்கு அடி உயரம் வரை எழும்பி பறக்கும். இவ்வகை மீன்கள், 700 அடி துாரம் வரை பறக்க கூடியது. 30 நொடிக்கு மேல், அவற்றால் பறக்க முடியாது. இவற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு, 20 முதல், 25 கி.மீ., ஆக மாறும்போது, பறக்கும் உயரம் குறைந்து மீண்டும், கடல் மட்டத்தை நோக்கி நெருங்க துவங்கும். மீனவர்கள் கூறுகையில், 'கோலா மீன்கள், சிறகுகளை அடித்து பறப்பதில்லை. காற்றில் சறுக்கியபடி செல்கிறது. பேரலைகளின் உச்சியில் இருந்து பறக்கும் கோலா மீன்கள், சில வேளையில், 15 அடி உயரம் வரை பறக்கும். இவை முரல் மீன்கள் போல் காணப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ