ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் இருப்பு இல்லை
ராமநாதபுரம்; கொள்முதல் செய்வதில் தொடரும்குளறுபடியால் ரேஷனில் பாமாயில், பருப்பு கிடைக்காமல் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறது. கொள்முதல் செய்வதில் மாற்றம் காரணமாக மே மாதம் முதல் பருப்பு, பாமாயில் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ரேஷன் கடைக்கு பலமுறை அலைகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.ரேஷன் விற்பனையாளர்கள் கூறியது: நவ.1 முதல் வழங்க வேண்டிய பொருட்கள் அக்.25ல் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும். தற்போது மாதம்தோறும் டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பாமாயில், பருப்பு தாமதமாக வருவதால் முதல் வாரத்தில் வழங்க முடியவில்லை. அரிசி, சீனி மட்டும் விநியோகம் செய்கிறோம். மாநில அளவில் இப்பிரச்னை உள்ளது. எனவே 3 மாதங்களுக்கு பாமாயில், பருப்பு மொத்தமாக கொள்முதல் செய்து மாதம் பிறப்பதற்கு முன்னதாக சரக்குகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.