வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி
பரமக்குடி : வன விலங்குகளால் பயிர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர். பரமக்குடி அருகே காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்டவற்றால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் புறக்கணிப்பதாக வனத்துறையினர் மீது விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெற இடத்திற்கான அடங்கல், பட்டா, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., சான்றுகள், சேதமான இடத்தில் போட்டோக்கள், மனுதாரரின் 2 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி 147 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் 27 பேர் முழுமையான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதில் 3 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் அன்பரசி தெரிவித்தார்.