54 மீனவர்களுக்கு ரூ.3.96 கோடி நிவாரணம் வழங்கல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் அங்கு நெடுங்காலமாக நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகு , நாட்டுப்படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . இதையடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து விசைப்படகு ஒன்றுக்கு ரூ.8 லட்சம், நாட்டுப்படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி 2024 முதல் 2025 பிப்., மாதம் வரை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 48 விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சம், 6 நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் என 54 மீனவர்களுக்கு 3.96 கோடி ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.