பக்தர்களிடம் வசூல் செய்த குடிசைகள் அகற்றம்: மறியல்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே பவளப் பாறைகளை மிதக்கும் ராமர் கல் எனக்கூறி பக்தர்களிடம் வசூல் செய்த குடிசைகள் அகற்றப்பட்டன. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயில் அருகே சில ஆண்டுகளாக சிலர் குடிசை அமைத்து, ஸ்ரீராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த மிதக்கும் கல் (பவளப்பாறைகள்) எனவும், அனுமான், ராமர் சிலைகளை வைத்து ராமாயண வரலாற்றை கூறியும் பக்தர்களிடம் பணம் வசூலித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கலெக்டரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று காலை 7:00 மணிக்கு ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன், தாசில்தார் முரளிதரன், கோயில் ஊழியர்கள் கோதண்டராமர் கோயில் அருகிலுள்ள ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியல் செய்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி.,சந்தீஷ் சமரசம் செய்த பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கோயில் ஊழியர்கள் பவளப்பாறைகள், பந்தல்களை அகற்றினர்.