ராமநாதபுரம் மாவட்ட ரயில் நிலையங்களில் இருந்த மரங்கள் அகற்றம்! மின்சார ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படுத்துமாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம்- - ராமேஸ்வரம் இடையே மின்சார இன்ஜின் கொண்டு ரயில்கள் இயக்கப்படுவதால் நடைமேடையில் உள்ள மரங்களை அகற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்--ராமேஸ்வரம் இடையே 52 கி.மீ.,க்கு மின் வழி பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அதற்கான பணிகள் நிறைவடைந்து விரைவு, பயணிகள் ரயில்கள் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது. டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. அதே நேரத்தில் ராமநாதபுரம், உச்சிப்புளி, வாலாந்தரவை, சத்திரக்குடி, பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் நடைமேடைகள், தண்டவாளம் அருகே வளர்ந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நடைமேடைகளில் வெயிலில் பயணிகள் காத்திருக்க வேண்டியிருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே அலுவலர்களிடம் கேட்ட போது, தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தண்டவாளத்தை ஒட்டி வளர்ந்துள்ள மரக்கிளைகள் மின்கம்பிகளை உரசி செல்கிறது. இதனால் விபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமேடை, தண்டவாளத்தை ஒட்டி வளர்ந்துள்ள மரங்கள் மட்டும் அகற்றப்படுகின்றன. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் 14 மரங்கள் உள்ளன. அதில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள 11 மரங்கள் மட்டும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மற்ற மரங்களின் கிளைகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ரயில் நிலையத்தை சுற்றிலும் மரங்கள் நட்டு பசுமையாக பராமரிக்கப்படும். ராமநாதபுரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதற்கான கட்டடம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணியின் ஒரு பகுதியாக நடைமேடை சீரமைப்பு, புதிய நடை மேம்பாலம், கூரை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.