தரைப்பாலத்தில் அகற்றப்பட்ட தடுப்பு கம்பி : விபத்து அபாயம்
பரமக்குடி: - பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் செல்லும் வைகை ஆறு தரைப்பாலத்தில் தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்ட நிலையில் தொடர் நெரிசல் ஏற்படுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.பரமக்குடி நகராட்சியில் 10 வார்டுகள் எமனேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் ஏராளமான கிராமங்களை உள்ளடக்கி இருக்கிறது. பள்ளி, கல்லுாரி உட்பட அனைத்து பணிகளுக்கும் பரமக்குடி வரை தரைப்பாலத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.பாலம் கட்டி 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால் பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளது. விபத்தை தடுக்கும் வகையில் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் உட்பட கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் மேல்நிலைக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தது.சில மாதங்களாக தேவையான போது கம்பிகளை அகற்றி போக்குவரத்து மேற்கொள்ளும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் விசேஷ நாட்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே தடுப்புக் கம்பிகளை பொருத்த நகராட்சி, போக்குவரத்து போலீசார், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.