உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாசியம்மன் கோயிலில் திருப்பணி முடிவு: சிலையை ஒப்படைக்க மனு

பாசியம்மன் கோயிலில் திருப்பணி முடிவு: சிலையை ஒப்படைக்க மனு

திருவாடானை: பாசிபட்டினம் பாசியம்மன் கோயிலை திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் தாலுகா அலுவலகத்தில் உள்ள சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சோழ மன்னர்களால் 11 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் எட்டு கைகளுடன், 4 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பாசியம்மன் சிலை இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன அச்சிலையை சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற போது போலீசார் கைப்பற்றினர்.அந்த சிலை திருவாடானை தாலுகா அலுவலக பாதுகாப்பில் உள்ளது. சாமி கும்பிடுவது சம்பந்தமாக பாசிபட்டினம், கலியநகரி கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோயிலில் புனரமைப்பு பணி தடைபட்டது.இந்நிலையில் தொண்டியை சேர்ந்த கலந்தர்ஆசிக் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அதில் சோழர்கள் தங்களது போர் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் உள்ள பாசியம்மன் கோயிலை கட்டினர். தற்போது இக்கோயில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளது. கோயிலை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நான்கு மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் கோயிலை திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை தேவஸ்தானம் சத்திரம் நிர்வாகத்தினர் கூறியதாவது:ஆக., ல் திருப்பணி வேலைகளை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. சிலையை ஒப்படைத்தவுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பாலாலயம் செய்யப்படும். அதன் பிறகு திருப்பணி வேலைகள் துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை