இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
பரமக்குடி: பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து செல்லும் இடது பிரதான கால்வாய் வழியாக இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் செல்கிறது. இதன்படி செய்களத்துார் அணையில் இருந்து திருப்பி விடப்பட்ட நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. சுப்பன் கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் இளையான்குடி பகுதியில் உள்ள 26 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுள்ளன.எனவே பார்த்திபனுார் இடது பிரதான கால்வாய் வழியாக காக்குடி, பிடாரேந்தல், திருவேங்கடம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் பரமக்குடி கீழ் வைகை வடிநில கோட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.