உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உணவுப்பொருளில் கலப்படம் அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

உணவுப்பொருளில் கலப்படம் அதிகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

திருவாடானை: உணவு பொருள்களில் கலப்படம் அதிகரித்து வருவதால் கிராமங்களில் கண்காட்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் வலியுறுத்தினர். திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, மங்களக்குடி, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மளிகை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் கலப்படம் என தெரியாமல் அதனை வாங்குகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதால் வாங்குகின்றனர். சிலர் வேறு வழியில்லாமல் அதனை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருக்கும் வியாபாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் உணவு பொருட்களிலும் கலப்படம் செய்து காசு பார்க்கிறார்கள். இதில் அரசு தனிக்கவனம் செலுத்தி தடுக்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் என்பது தற்போது மிக சாதாரணமான ஒரு விஷயமாகவே மாறி வருகிறது. உணவு பாதுகாப்பை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்களில் கண்காட்சி நடத்த அரசு நடவடிக்கை வேண்டும். அப்போது தான் கலப்படத்தை எளிதில் கண்டறிந்து அவற்றை தடுக்க முடியும் என்றனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: மேலோட்டமாக பார்க்கும் போது அந்தப் பொருள் ஒரிஜினல் போலவே தோற்றமளித்தாலும் கலப்படத்தால் அதன் உண்மைத் தன்மை மாறுகிறது. இருந்த போதிலும் பொதுமக்களுக்கு அது தெரிவதில்லை. பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிக கவனமாக வாங்க வேண்டும். ஏனெனில் பொருட்களின் தரத்தை பார்க்காமல் காசு குறைவு என பார்த்து வாங்குவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கிராமங்களில் நடக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற மருத்துவ முகாம்களில் கலப்படம் இல்லாத பொருளையும், கலப்படம் செய்யப்பட்ட பொருளையும் வைத்து கண்காட்சி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கலப்படம் செய்யப்பட்ட பொருள் விற்பனை செய்வதாக தெரிந்தால் இணையதளத்தில் புகார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை