கடல்சார் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை துவங்க கோரிக்கை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்சார் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் துவங்க அரசு முன்வர வேண்டும் என சி.ஐ.டி.யு., வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.,) மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மகாலெட்சுமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சிவாஜி வேலை அறிக்கை, பொருளாளர் முத்து விஜயன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிவாஜி, செயலாளராக சந்தானம், பொருளாளராக பாஸ்கரன், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் என36 பேர் தேர்வு செய்யப் பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை துவக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கடல்சார் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை துவங்க அரசு முன்வர வேண்டும். சேது சமுத்திரம் திட்டத்தை துவக்கினால் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். ராமநாதபுரத்தை மையமாக கொண்டு போக்குவரத்து மண்டலம் ஆரம்பிக்க வேண்டும். அரசு உப்பு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். உள்ளாட்சி பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமிப்பதை தடுப்பது என தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகள் மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது.