கடலில் மூழ்கிய விசைப்படகு மீட்பு
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் மூழ்கிய விசைப்படகு இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் 50.இவருக்கு சொந்தமான விசைப்படகில் தொண்டி அருகே சோலியக்குடியை சேர்ந்த மதியழகன், எக்கோனியல், மற்றொரு மதியழகன், ராபின்சன், நவனேஷ் ஆகிய ஐந்து மீனவர்கள் செப்.21 அதிகாலை தொண்டி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.நீண்ட துாரம் சென்று மீன்பிடித்த போது படகில் ஓட்டை விழுந்ததால் கடல் நீர் படகிற்குள் புகுந்தது. இதில் படகுடன் மீனவர்கள் கடலில் மூழ்கத்துவங்கினர். தத்தளித்த அவர்கள் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சோலியக்குடி மீனவர்கள் மற்றும் மரைன் போலீசார் ஐந்து படகுகளில் சென்று அம்மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் மூழ்கிய படகை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பின் நேற்று காலை அப்படகை மீட்ட மீனவர்கள் வேறொரு படகில் அதனை கயிற்றால் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.