புதிய ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புச்சுவர், ரோடு சேதம் வழிகாட்டி பலகை அவசியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் கீழக்கரை ரயில்வே மேம்பாலம் நேற்று(செப்.20ல்) வாகனபோக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இப்பாலத்தில் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டும், ரோடு சேதமடைந்துள்ளதை சீரமைக்க பயணிகள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் நகரில்இருந்து சக்கரகோட்டை ஊராட்சி சேதுநகர் செல்லும்வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு மேம்பாலம் அமைத்தால்கிழக்கு கடற்கரை சாலையை இணைத்து திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு எளிதாக வந்து செல்ல முடியும் என மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து 2018ல் ரூ.25 கோடியே 60 லட்சத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி இவ்வாண்டு முடிக்கப்பட்டது. நேற்று (செப்.20ல்) ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொது போக்குவரத்திற்காக திறந்து வைத்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.பாலப்பணி 6 ஆண்டுகளாக நடந்ததால் தடுப்புசுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளது. வாகனப் போக்குவரத்து துவங்கியுள்ளதால் உடனடியாக சீரமைக்க வேண்டும். புதிய பாலத்தின் வழியாக எந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்பதை வெளியூர் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி அறிவிப்பு பலகைகள் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.