கட்டுமான பொருட்கள் விலை உயர்வு: வீடு கட்டுவோர், தொழிலாளர் தவிப்பு
திருவாடானை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அதிகரித்து வருவதால் வீடு கட்டுபவர்கள், ஒப்பந்ததாரர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கி பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, சின்னக்கீரமங்கலம், மங்களக்குடி மற்றும் கிராமங்களில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி வாழ்க்கை நடத்தும் கூலி தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை தங்கத்தை போல் உயர்ந்து வருவதால் வீடு கட்டி கொண்டிருப்போருக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் மூடை ரூ.320, ஒன்றரை இன்ச் சல்லி ரூ. 5000த்தில் இருந்து 7000, முக்கால் இன்ச் சல்லி ரூ. 6000த்திலிருந்து 8000 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. செங்கல் ரூ.9 லிருந்து 10.50 வரையிலும், அதே போல் கம்பிகள், எம்.சாண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களும் விலை உயர்ந்துள்ளன.இதனால் சதுர அடி வீதம் விலை பேசி ஒப்பந்தம் போட்டு வீடுகள், கடைகள், அலுவலகங்கள் விலை உயர்வின் காரணமாக தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பாரதிநகர் கட்டட ஒப்பந்தகாரர் உதயநாராயணகுமார் கூறியதாவது- கட்டுமான பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் தொழில் முடக்கம் ஏற்பட்டு, அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டட பணியை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முக்கிய கவனம் செலுத்தி கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.