அரியனேந்தல் இருவழி சாலை சந்திப்பில் விபத்து அபாயம்
பரமக்குடி; பரமக்குடி அருகே அரியனேந்தல் இருவழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் எச்சரிக்கை போர்டுகளை அதிகரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். மதுரை -- பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் வழியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பரமக்குடி, ராமநாதபுரம் செல்லும் அரியனேந்தல் ஊராட்சி பகுதியில் நான்கு வழி சாலையிலிருந்து இருவழிச் சாலையாக மாறுகிறது. மேலும் இப்பகுதி அபாயகரமான வளைவான ரோடாக இருக்கிறது. இச்சூழலில் இரவு மற்றும் அதிகாலையில் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் வரும் போது அதே நேர்கோட்டில் இருவழிச் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் வளைவான இருவழிச் சாலை சந்திப்பில் அதிக விபத்துக்கள் நடக்கிறது. மேலும் டூரிஸ்ட் வாகனங்கள் மட்டுமல்லாது டூவீலர் விபத்துக்கள் இப்பகுதியில் அதிகளவில் நடந்துள்ளது. இது போன்ற வளைவான இடத்தில் பஸ் ஸ்டாப் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் ஒளிரும் ஸ்டிக்கர்கள் கொண்ட எச்சரிக்கை கோடுகளை ரோடுகளில் அமைக்க வேண்டும். மேலும் சிக்னல் விளக்குகளையும் அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.