பாம்பன் துாக்கு பால டவருக்கு கூரை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் ஆப்பரேட்டர்கள் வெயில், மழையில் இருந்து தப்பிக்க புதிய சீட் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இப்பாலம் நடுவில் உள்ள லிப்ட் முறையில் திறந்து மூடும் துாக்கு பாலத்தின் இருபுறமும் 34 மீ., உயரத்தில் இரும்பு டவர் உள்ளது. இந்த டவர் மேலே உள்ள கேபினில் துாக்கு பாலத்தை திறக்க உதவும் ராட்சத இரும்பு வீல்கள், மின் மோட்டார் உள்ளது. இதனை பராமரித்து கண்காணிக்க கேபினில் இரு ஆப்பரேட்டர்கள் உள்ளனர்.வெயில் காலத்தில் ஆப்ரேட்டர்கள் வியர்வையால் அவதிப்பட்டும், மழை காலத்தில் மழை நீர் கேபினுள் புகுந்து இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரு டவரின் மேலே வெயில், மழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய சீட் பொருத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணி ஓரிரு நாட்களுக்கு பின் முடிந்து விடும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.