இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகளை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.மண்டபம் வேதாளை தெற்கு தெரு ஜாபர் மகன் ராஜாமுகமது 40, வீட்டில் தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல் முருகன், மண்டபம் போலீஸ் எஸ்.ஐ., பாலமுருகன், போலீசார் பாரதி, கேசவன், கார்வண்ணன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட 611 கிலோ கடல் அட்டைகளை உலர வைத்த நிலையில் மூடைகளில் இருந்ததை பறிமுதல் செய்த போலீசார் மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பதுக்கி வைத்த ராஜா முகமதுவை தேடி வருகின்றனர்.இந்த கடல் அட்டைகளை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா நாடுகளுக்கு உணவுப் பொருளாக விற்கின்றனர். இங்கு கடல் அட்டைக்கு தடை உள்ளதால் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி பெரும் லாபம் அடைகின்றனர். பறிமுதல் செய்த கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி என போலீசார் தெரிவித்தனர்.