ஆர்.எஸ்.மங்கலம்- -வேளாங்கண்ணி பஸ் இயக்குவதற்கு வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி பஸ் இயக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவ சர்ச்சுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சுக்கு ஆண்டுதோறும் அதிகளவில் சென்று வருகின்றனர்.குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சென்று வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணி செல்லும் வகையில் பஸ் வசதி இல்லாததால் பல பஸ்கள் மாறி செல்லும் நிலை உள்ளது. இதனால் வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.இதனால் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் பயனடையும் வகையில் ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.